வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.46 லட்சம் மோசடி

வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.46 லட்சம் மோசடி
வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.46 லட்சம் மோசடி

திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாகக் கூறி வங்கி அதிகாரி உதவியுடன் 46 லட்சத்தை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

தேனி காமயக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்," நான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். அரண்மனைப்புதூரிலிருந்து, சத்திரப்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ குரு கார்டன்ஸ் எனும் பெயரிலும், தற்போது "சன் சைன்" எஸ்டேட்ஸ் எனும் பெயரில் வீடு கட்டி விற்பனை செய்வதை கேள்விப்பட்டேன். வீடு வாங்குவதற்காக கடந்த 2016 அக்டோபரில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்த கற்பகம் அவரது கணவர் விவாஹர் ஆகியோரை சந்தித்தேன். 33 லட்சத்திற்கு வீட்டு லோன் வாங்குவதற்காக, திருச்சி தெப்பக்குளம் பஞ்சாப் நேஷனல் வங்கியை அவர்களுடன் சேர்ந்து அணுகினேன். சிபில் ஸ்கோர் பார்ப்பதாகக் கூறி என்னிடம் பல கையெழுத்துக்களை அவர்கள் பெற்றுக்கொண்டனர். 

இதனையடுத்து, எனக்கு தெரியாமல் என் பேரில் போலி முகவரியைக் காண்பித்து, வங்கி மேலாளரின் உதவியுடன் என்னுடைய மற்றும் எனது மனைவி பெயரில் ரூ.46 லட்சத்தைக் கடனாக பெற்று, வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் இது குறித்து எவ்வித தகவலும் எங்களுக்கு வராத வகையில் செய்து பணத்தை மோசடி செய்துள்ளனர். இது எனக்கு தெரியவர அவர்களிடம் கேட்டேன். அப்போது, 6,25,000 ரூபாய்க்கு அவர்கள் காசோலை கொடுத்தனர். ஆனால் அந்தக் காசோலை பணமின்றி திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. இது குறித்து புகாரளித்தால் என்னையும், குடும்பத்தினரையும் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டினர். 

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, திருச்சி டிஎஸ்பியிடமும், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடமும் புகார் அளிக்க உத்தரவிட்டனர். அதன்படி புகாரும் அளித்தேன். புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, எனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com