புதுக்கோட்டை: குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை என புகார்

புதுக்கோட்டை: குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை என புகார்
புதுக்கோட்டை: குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை என புகார்

புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடைந்து கிடக்கும் ஜன்னல் கண்ணாடிகள், சுவர்களில் பெயர்ந்து விழும் சிமெண்ட் பூச்சு என சிதிலமடைந்து காணப்படுகிறது, புதுக்கோட்டை சமத்துவபுரம் அருகே கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய பன்னடுக்கு மாடி குடியிருப்புகள். இவை கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பல்வேறு காரணங்களால் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் இருப்பதே தற்போதைய குற்றச்சாட்டுக்கு காரணம். வீடற்ற மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் 150.13 கோடி ரூபாய் மதிப்பில் 1,920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரவேற்பரை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை என அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொருவரிடமும், பங்களிப்பு தொகையாக சுமார் 95,000 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்னும் குடிநீர் இணைப்பும், பாதாள சாக்கடை வசதியும் செய்யவில்லை எனக் கூறி வீடுகளை வழங்க தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாடகையை சேமிக்கலாம் என நினைத்து வட்டிக்கு கடன் வாங்கியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பணத்தைக் கொடுத்தால், இதுவரை ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக பயனாளிகள் வருந்துகின்றனர். உரிய பாதுகாப்பு இல்லாததால் குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாகியிருப்பதாக அவர்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பயனாளிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை விளக்கம் கேட்டது. பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் முடிந்ததும், ஓரிரு மாதங்களில் பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும் என அவர்கள் விளக்கமளித்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 2 ஆண்டுகளில் சேதமடைந்த நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கும் அதே நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பயனாளிகளின் அச்சம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com