கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி நேற்று (08-06-2018) நடைபெற்றது. விவாத நிகழ்வு குறித்து காவல்துறைக்கு புதிய தலைமுறை சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஞானதேசிகன், தமிழிசை சவுந்தரராஜன், செ.கு.தமிழரசன், செம்மலை, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பாலகிருஷ்ணன், தனியரசு, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 505- பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுதல் , 153ஏ- இரு பிரிவினா் இடையே பிரச்சினை ஏற்படுத்துதல், 3 (1}- சொத்து சேதம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பல அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.