பல்லாவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் உட்பட நாம் தமிழர் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 18 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக நேற்று கருப்புக்கொடி காட்டியதால் நாம் தமிழர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பண்பாட்டு கலை இலக்கிய பேரவை, காவிரி உரிமை மீட்புக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோரை கைது செய்து ஆங்காங்கே தனியார் மண்டபங்களில் காவல்துறையினர் அடைத்து வைத்தனர்.
அவர்களில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவரையும் காவல்துறையினர் மாலையில் விடுவித்தனர். ஆனால், சீமான் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே கலைந்து செல்ல முடியும் என மற்றவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், சீமான் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல்லாவரத்திலுள்ள மண்டபம் முன் போராட்டமும் நடைபெற்றது. சீமானை பார்ப்பதற்கு மன்சூர் அலிகான் வந்தபோது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து மண்டப வாயிலில் மன்சூர் அலிகான், மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே போராட்டத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் உட்பட 18 பேரை கைது செய்த பல்லாவரம் போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் சீமானும், அவரது கட்சியினரும் விடுவிக்கப்படுவதாக காவல்துறையினர் அறிவித்தனர். அதனையடுத்து, ஆங்காங்கே மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலைந்து சென்றனர். மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர்.