Public
Publicpt desk

புதுக்கோட்டை: ‘பொதுப் பாதையை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டனர்’ - ஆட்சியரிடம் மக்கள் புகார்

கறம்பக்குடி அருகே பொதுப் பாதையை தனி நபருக்கு வருவாய்த் துறையினர் பட்டா போட்டு கொடுத்துள்ளதால் பள்ளி குழந்தைகள் செல்வதற்கு பாதை இல்லை என குற்றம் சாட்டி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மயிலம்கோன்பட்டியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த 50 குடும்ப மக்களுக்கு சாலையில் செல்ல சரியான பாதை வசதி இல்லை என்றும் அங்கிருந்த பொதுப் பாதையை வருவாய்த் துறை அதிகாரிகள் தனி நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டனர் என்றும் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பள்ளி செல்ல பாதை இல்லாமல் தவிக்கின்றனர் என்று குறிப்பிட்டு, அவர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நேற்று புகார் மனு அளித்தனர். மாணவர்களை பள்ளி சீருடையில் பள்ளிக்கு அனுப்பாமல் ஆட்சியர் அலுவலகத்துக்கு பெற்றோர் அழைத்து வந்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

police
policept desk

அப்பெற்றோர் நம்மிடையே கூறுகையில்... “இத்தனை ஆண்டுகாலமாக எங்கள் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை எங்களின் எதிர்ப்பையும் மீறி வருவாய்த் துறையினர் தனி நபருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளளனர். இதனால் எங்களது பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தனிநபர் தற்போது அந்த இடத்தில் குழி தோண்டி வைத்துள்ளதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com