மாணவருக்கு முடிவெட்டிய ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார்
திருவாரூரில் பள்ளி மாணவரின் தலைமுடியை பிளேடால் வெட்டிய ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குளிக்கரையைச் சேர்ந்த சுந்தர் என்பரின் மகன் சுரேந்தர். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் அதிக தலைமுடியுடன் பள்ளிக்கு வந்ததாக கூறி, வகுப்பு ஆசிரியை விஜயா மாணவரின் தலைமுடியை சக மாணவரின் உதவியுடன் மழித்துள்ளார்.
இதுகுறித்து கூறும் மாணவரின் உறவினர்கள், இரண்டு நாட்களுக்கு முன்புதான் மாணவருக்கு முடிவெட்டி பள்ளிக்கு அனுப்பியதாக தெரிவித்தனர். எனவே அத்துமீறி செயல்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தினர். இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன் மகன் சுரேந்தர் தலைமுடியை வெட்டிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை சுந்தர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.