விலங்குகள், குழந்தைகளை தவறாக பயன்படுத்தினார் மதுசூதனன்: தேர்தல் ஆணையத்தில் புகார்
தேர்தல் பரப்புரை விதிகளில் குழந்தைகள், விலங்குகளை வைத்து பரப்புரை செய்யக் கூடாது என இருப்பதாகவும், ஆனால் இந்த விதிகள் மதுசூதனன் பரப்புரையில் மீறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை மீறி அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை செய்ததாக திமுக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், விலங்குகளை வைத்து பரப்புரை செய்யக் கூடாது என விதி இருப்பதாகவும், ஆனால் இந்த விதியை மீறி மதுசூதனன் தரப்பு பரப்புரை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே மதுசூதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திமுக சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையில் விதிகளை மீறியதாக இன்று ஒரு நாள் மட்டும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குத்துவிளக்கினை பரிசாக அளித்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக அதிமுக அம்மா கட்சியினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் புகார்கள் தொடர்பாக திமுக-வினர் மீது 3 வழக்குகளும், தேமுதிக-வினர் மீது இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

