ராமநாதபுரம்: காதல் திருமணம் செய்த தம்பதியை 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்

ராமநாதபுரம்: காதல் திருமணம் செய்த தம்பதியை 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்
ராமநாதபுரம்: காதல் திருமணம் செய்த தம்பதியை 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்

காதல் திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தை கடந்த பத்து ஆண்டுகளாக ஊரை விட்டு கிராமத்தினர் ஒதுக்கி வைத்தனர். வீட்டிற்கும், தென்னந்தோப்பிற்கும் செல்லும் பொது பாதையை அடைத்து வைத்து 30 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகேயுள்ள தெற்கூரைச் சேர்ந்த பரமேஸ்வரன், உமாவதி தம்பதியினர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களில், வாலாந்தரவை அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்த உமாவதி பொள்ளாச்சிக்கு கூலி வேலைக்கு சென்ற போது, பொள்ளாச்சியை சேர்ந்த பரமேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இதில், பரமேஸ்வரன் வீட்டில் இருவரையும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில் ஒருசில மாதங்கள் கழித்து திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே போல உமாவதி வீட்டிலும் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து பரமேஸ்வரன், உமாவதி தம்பதியர் பொள்ளாச்சி பகுதியில் போதிய வருமானம் இல்லாததால் தெற்கூர் கிராமத்திற்கு வந்த இருவரும், தென்னங்கீற்றை பின்னி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இதையடுத்து பரமேஸ்வரன் உமாவதி தம்பதியினர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், காதல் திருமணம் செய்து கொண்டதால், தெற்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரூ. 30ஆயிரம் அபராதம் விதித்ததாகவும் அதை உமாவதியின் தாய் முத்துராக்கு தனது பசு மாட்டை விற்று அபராதத்தை கட்டியதாக கூறுகின்றனர்.

அபராதம் கட்டிய பின்னரும் காதல் திருமணம் செய்த தம்பதியினரையும், அவரது தாய் வீட்டாரையும் கடந்த 10 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததோடு, கோயிலில் சாமி கும்பிடவோ, பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவோ, ஊரில் நடக்கும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் ஊரார்களால் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தற்போது வரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்து வந்த நிலையில், உமாவதிக்கு நகை உள்ளிட்ட சீர்வரிசைகள் செய்யப்படாமல் இருந்ததால் அதற்காக கடந்த மாதம் உமாவதியின் தாய் முத்துராக்கிற்கு சொந்தமான ஊருக்குள் உள்ள 36 சென்ட் நிலத்தை தனது மகள் உமாவதிக்கு கிரயமாக எழுதி கொடுத்துள்ளார்.

இதையடுத்து பரமேஸ்வரன், உமாவதி தம்பதியினர் வாங்கிய இடத்திற்கு குடியேறக் கூடும் என்ற அச்சத்தில் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும் பொது பாதையை கருவேல முள் செடிகளை கொண்டும், பனைமரம் மட்டையை வைத்தும் அடைத்து உமாவதியின் தாய் முத்துராக்கு வீட்டிற்கும், தென்னை தோப்பிற்கும் செல்ல விடாமல் தடுத்து பிரச்னை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து முள்வேலியை மட்டும் தற்போது அகற்றியுள்ளனர். மேலும் தாங்கள் கிரையம் வாங்கிய இடத்தை அபகரிப்பு செய்வதற்காக தீண்டாமை வேலி அமைத்து எங்களை கொடுமைப் படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த 17ஆம் தேதி பரமேஸ்வரன் தான் வாங்கிய தென்னந்தோப்பிற்கு சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஒருசிலர் அவரை சாதியைச் சொல்லி திட்டி பயங்கர ஆயுதத்துடன் தாக்க வந்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் 5 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இதையடுத்து காதல் திருமணம் செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com