தவெக கூட்டத்தை புறக்கணித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.. முதல்வருடன் சந்திப்பு!
செய்தியாளர் - M. மீரா
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளுடன் ஆதரவுடன் தவெகவின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். விசிக, ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சியமைக்க நாங்கள் தான் கூட்டணி கட்சிகளை அனுப்பி வைத்தோம் என்ற கருத்தை திமுக அடிக்கடி கூறி வருகிறது, திமுகவின் இந்தக் கூற்றை மறுத்திருக்கின்றன கூட்டணி கட்சிகள். மேலும் ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன. ஆனால் திமுக தவெக ஆட்சி நீடிக்காது என்றும் 6 மாதம் கூட தாக்குபிடிக்காது எனவும் திமுக தலைவர் ஸ்டாலினும் தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்தச் சூழலில் முதல்வர் விஜய் தலைமையில், இன்று தவெக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு, ஐயூஎம்எல், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் மரியாதை நிமித்தமாக சிபிஎம் கட்சியின் தலைவர் சண்முகம் மற்றும் சிபிஐ கட்சியின் தலைவர் வீரபாண்டியனும் முதல்வரை சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள பள்ளி, கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் , உழைக்கும் மக்களின் கோரிக்கைகளில் தவெக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பு படை வரவேற்புகுரியது என்றும் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இன்று மாலை நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிக் கூட்டத்தில் விசிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

