இரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..!
சென்னையில் இரவுப்பணியில் ஈடுபட்ட காவலர்களை நேரில் சந்தித்த ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட சென்னை முழுவதும் தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் காவலர்கள் இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம், தியாகராய நகர் பனகல் பூங்காவுக்கு சென்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்நாதன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து கூறினார். அத்துடன் இனிப்புகளையும் வழங்கினார். காவலர்களும் ஆணையருக்கு தங்களின் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை நேரத்திலேயே பலர் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். பலகாரம் உள்ளிட்ட திண்பண்டங்களை அக்கம்பக்கத்தினருடன் பறிமாறிக் கொள்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிப்பதால் தீபாவளி களைகட்டியுள்ளது.