துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சூரப்பா எங்கு சென்றாலும் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு மூன்று பேரிடம் மட்டுமே இறுதிகட்ட விசாரணை நடத்தவுள்ளதாகவும் நீதியரசன் கலையரசன் குழு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணையின் முடிவுகளை வைத்துக் குற்றச்சாட்டுகளைத் தொகுத்து சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு அவர் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரிலோ பதிலளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுவரை ஆணையம் கேட்கும் ஆவணங்கள் பல்கலைக்கழகம் தரப்பில் சமர்பிக்கப்படவில்லை என்றும் கலையரசன் தெரிவித்துள்ளார். எனவே சூரப்பா ஓய்வுபெற்று எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அவர் பதிலளிக்காவிட்டால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலையரசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரூ.280 கோடி ரூபாய்க்கு பண மோசடி நடந்துள்ளதாக பலதரப்பினரும் கொடுத்த புகாரில் முகாந்தரம் இருப்பதாகக் கூறி, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி கமிட்டியை நியமித்தார். இதில் சூரப்பா மகளுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது மற்றும் தேர்வு கட்டணத்தில் முறைகேடு என்பது குறித்த பல தகவல்கள் தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.