“ தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்”- நாகேஷ் பிறந்ததினம் இன்று

“ தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்”- நாகேஷ் பிறந்ததினம் இன்று

“ தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்”- நாகேஷ் பிறந்ததினம் இன்று
Published on

சிரிப்பு... வாழ்க்கையில் மனிதனுக்கு இறைவன் வழங்கிய வரம்... இந்த வரத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பவர்கள் நகைச்சுவை நடிகர்கள். தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நாயகர்களில் ஒருவரான நாகேஷிற்கு இன்று 87-வது பிறந்த நாள்.

ஒடிசலான தேகம். துறுதுறுவென்ற செயல்பாடு. இதுதான் நாகேஷின் அடையாளம். ஈரோடு அருகிலுள்ள தாராபுரத்தை சொந்த ஊராக கொண்ட நாகேஷ் 1933-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இளம் வயதிலேயே நாகேஷை நாடகம் ஆட்கொண்டது. முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகள் நாகேஷின் முன்னேற்றத்திற்கு பாதகமாக இருந்தாலும், பாதகத்தையே படிக்கட்டுகளாக்கி விறுவிறுவென முன்னேறினார் நாகேஷ். பெரும் போராட்டங்களுக்கு பின் தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் மூலம் நகைச்சுவை நடிகர் ஆனார் நாகேஷ்.

அதைத் தொடர்ந்து வந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தில் செல்லப்பா கதாபாத்திரம் மூலம் காமெடி நடிப்பிற்கென தனியொரு பாணியை அறிமுகப்படுத்தினார் நாகேஷ். குறிப்பாய், பாலையாவிடம் கதை சொல்லும் காட்சிகள் எல்லா காலகட்டத்திலும் ரசிக்கக் கூடியவை.

காதலிக்க நேரமில்லை கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து வாய்ப்புகள் நாகேஷை நாடி வந்தன. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார் நாகேஷ். சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நாகேஷ் வெளிப்படுத்திய நடிப்பு, அழுத்தமான ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் அவருக்குப் பெற்றுத் தந்தது.

'திருவிளையாடல்' படத்தின் தருமி வேடத்தில் தோன்றி ரசிர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார் நாகேஷ். வயோதிகம் சூழ்ந்த போதும் தன் நடிப்பில் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் நாகேஷ். அதனால், ரஜினி கமல் என அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களிலும் சூப்பர் நடிகனாக வலம் வர முடிந்தது.

கமலின் 'தசாவதாரம்' திரைப்படம்தான், நாகேஷுக்கு கடைசி திரைப்படம். இந்தப் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் கமலை அழைத்து "என் கடைசிப் படம் நல்ல படம், I am honor-டா" என கமலை உச்சி முகர்ந்திருக்கிறார். 30 ஆண்டுகள் காமெடியன், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என காலம் முழுக்க மக்களை மகிழ்ச்சிப்படுத்தி கொண்டேயிருந்த நாகேசுக்கு பெரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லைதான். ஆனால், அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அவர், மனம் மகிழ்ந்த ரசிகனின் சிரிப்பே தனக்கான விருது என பலமுறை சொல்லியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com