தலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா?
புதுக்கோட்டை அருகே கல்லூரிக்குச் சென்ற மாணவி உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார். தலைமுடி வெட்டப்பட்டு கிணற்றிற்கு அருகே வீசப்பட்டு இருந்ததால், சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மங்களா கோயிலைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம். இவரின் பேத்தி ஆர்த்தி. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல கல்லூரிக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார் ஆர்த்தி. சிறிது நேரம் கழித்து மங்களா கோயிலில் உள்ள கிணறு ஒன்றின் அருகே அவரது புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. அருகே தலைமுடி கொத்து கொத்தாக கிடந்தது. அவ்வழியே சென்றவர்கள் புத்தகத்தை எடுத்துப் பார்த்தனர். அதில் ஆர்த்தி என்ற பெயர் இருந்தது. அருகே கிடந்த தலைமுடியைக் கண்டவர்கள் ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்தனர்.
உடனடியாக ஆர்த்தியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கிணற்றுக்குள் பார்த்தனர். தண்ணீரில் ஆர்த்தியின் உடல் மிதந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறித் துடித்தனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்த்தியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். அவரது தலைமுடி பாதி வெட்டப்பட்டு இருந்தது. ஆர்த்தியின் உடல், கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்த்தி உயிரிழந்து எப்படி? அவர் கொலை செய்யப்பட்டாரா? அப்படியென்றால் அவரைக் கொலை செய்தது யார்? கொன்றது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண காவல்துறையினர் முயன்று வருகின்றனர். ஆர்த்தியின் தலைமுடி வெட்டப்பட்டு இருப்பதால் அவரை கொலை செய்தது சைக்கோ கொலையாளியா? அல்லது ஒருதலைக் காதலால் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.