காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் வெட்டிய இளைஞர்..! போலீஸ் வலைவீச்சு
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் கையை கத்தியால் வெட்டி விட்டு இளைஞர் தப்பி ஓடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை சாந்தி நகர் பிரதான சாலை அருகே 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் கணினி பயிற்சி வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட பொன் பாக்கியராஜ் என்ற இளைஞர், பயிற்சி வகுப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் வருமாறு அழைத்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து வெளியில் சென்ற கல்லூரி மாணவியை தன்னை காதலிக்குமாறு பொன் பாக்கியராஜ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பெண்ணின் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குப் பெண்ணிற்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.