”தரமற்ற உணவு வழங்கிய வார்டன் மீது வழக்கு” - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸான் என்ற தொழிற்சாலையிலுள்ள விடுதியில், கடந்த புதன்கிழமை தயாரிக்கப்பட்ட உணவினால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திரும்பவில்லை என்றும், அவர்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி, “2 பெண்கள் (கஸ்தூரி, ஐஷ்வர்யா) இறந்ததாக வெளியான தகவல் வதந்தி. 2 பெண் தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையிலுள்ள வீடியோ தவறாக பரப்பப்படுகிறது. பிற ஊழியர்கள் அனைவரும்கூட நலமாக உள்ளனர். டீஹைட்ரேஷன் ஆகி அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டிருந்திருக்கிறது. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களும் நலமாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட 115 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
விடுதிகளில் இனி இப்படி நடக்காமல் இருக்க, தனியொரு கமிட்டி விரைவில் அமைக்கப்படும். தற்போது இவ்விவகாரத்தில் தரமற்ற உணவு வழங்கிய விடுதி வார்டன் மிது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், போராட்டாக்காரர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 2 பெண்களிடமும் வீடியோ காலில் பேசி அதனை போராட்டத்திலுள்ள தொழிலாளர்களிடம் காண்பித்தார் ஆட்சியர்.