மணப்பாறை அருகே கல்லூரி மாணவி, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தோப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மகள் போதும்பொண்ணு (17). இவர் மாத்தூர் பகுதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். வீட்டுக்கும், கல்லூரிக்கும் நீண்ட தொலைவு என்பதால், விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். விடுமுறை தினங்களில் வீட்டிற்கு வந்துவிடுவார். அந்த வகையில் வீட்டிற்கு வந்திருந்த மாணவி, ஏதோ காரணத்தால் அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தனது தாயின் போனை எடுத்து, யாருடனோ பேச ஆரம்பித்த அவர், சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார். வீட்டில் இருந்த அம்மா வெளியே போக, தம்பியோ அருகே கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவி, திடீரென மண்ணெண்ணெயை எடுத்த தனது தலையில் ஊற்றி கொளுத்திக்கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால் உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். கால்நடை மேய்த்துவிட்டு வீடு வந்த தம்பி, அக்காவை பார்த்ததும், ‘ஐயோ அக்கா.. என்னாச்சு தெரியலயே. நான் என்ன பண்ணுவேன்’ என அழுது புலம்பி உறவினர்களை ஓடிப்போய் அழைத்துவந்துள்ளார்.
அவர்கள் வந்து பார்த்து, மாணவி ஏற்கனவே உயிரிழந்ததை உறுதிசெய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவி பேசிய கைப்பேசியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.