திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவது அதிமுகவா, பாஜகவா? போஸ்டர்கள் மூலம் பனிப்போர்
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது அதிமுகவா, பாஜகவா என்ற பனிப்போர் போஸ்டர் வடிவில் தொடங்கியிருக்கிறது.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியை குறிவைத்து அதிமுகவும் பாஜகவும் போட்டிபோட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் 2001 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதேசமயம் 2006 மற்றும் 2016 இரண்டு தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் நயினார் நாகேந்திரன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த சில மாதங்களில் மாநில துணைத்தலைவர் பதவி பெற்றார். பின்னர் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்த முறை வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதற்கு கேட்டு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், இன்று திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்க வருகை தர உள்ளார். இன்று மாலை தேர்தல் காரியாலயம் திறக்கப்படுகிறது. இந்த காரியாலயம் நெல்லை சந்திப்பில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் வளாகத்தில் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் இந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் இரட்டை இலை வெற்றிபெறும் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். குறிப்பாக அண்ணா திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு சாதனைகளை அடையாளப்படுத்தும் விதமாக ஒவ்வொரு திட்டங்களையும் பதிவிட்டு வண்ண வண்ண போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தான் போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது.