கோவை | விபரீத முடிவெடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் - போலீசார் விசாரணை
செய்தியாளர்: பிரவீண்
கோவையில் நேற்றிரவு பீட் காவலர் குமரேசன் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வஉசி மைதானத்தில் உள்ள மரத்தில் சேலையில் தூக்கிட்டு தொங்கியபடி ஆண் சடலம் இருந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் பந்தய சாலை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் (54) என்பது தெரிய வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் 1997 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தவர். இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் காவலா சொக்கலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.