கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.8.10 லட்சம் மோசடி - பெண் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு
செய்தியாளர்: சுதீஷ்
கோவை கவுண்டம்பாளையம் கந்தகோனார் தெருவைச் சேர்ந்தவர் தங்கநாடன். இவரது மகன் பி.இ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். அப்போது தங்கநாடனுக்கு அவரது நண்பர் ரவி என்பவர் மூலமாக சேலம் அண்ணா நகரைச் சேர்ந்த சரவணன் மற்றும் திருப்பூர் குடிமங்கலம் சக்திவேல் நகரைச் சேர்ந்த ஜெயந்தி ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் தங்கநாடனிடம், தங்களுக்கு அரசு துறையில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும், அவர்கள் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் எனக் கூறி ரூ.9 லட்சம் கேட்டுள்ளனர். அவர்களது ஆசை வார்த்தையை நம்பிய தங்கநாடன், இருவரின் கூகுள் பே எண்ணிற்கு பல்வேறு கட்டங்களாக ரூ.9 லட்சம் வரை அனுப்பியிருக்கிறார்.
ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை என பணத்தை திருப்பிக் கேட்டபோது, இருவரும் ரூ.9 லட்சத்துக்கு 3 காசோலைகளை கொடுத்துள்ளனர். ஆனால், அதன் மூலம் ரூ.90 ஆயிரம் மட்டும் எடுக்க முடிந்தது. மீதமுள்ள காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது. இது குறித்து தங்கநாடன், கவுண்டம்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரவணன் மற்றும் ஜெயந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.