கோவை இரட்டை ஆணவ படுகொலை | குற்றவாளிக்கு மரண தண்டனை அறிவிப்பு
கோவை இரட்டை ஆணவ படுகொலை வழக்கு - குற்றவாளிக்கு மரணதண்டனை கூறி தீர்ப்பளித்த நீதிமன்றம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலை கனகராஜின் வீட்டார் ஏற்று கொள்ளாத நிலையில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் தனியாக அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர்.
இதனையடுத்து கனகராஜின் சகோதரர் வினோத்குமார் கனகராஜின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும் வெட்டி கொலை செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக மேட்டுப்பாளையம் நகர காவல்துறையினர் எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கனகராஜ் சகோதரர் வினோத்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அப்போது கூட்டுசதி என்ற பிரிவில் பதியப்பட்ட வழக்கினை ஆதாரப்பூர்வமாக நிருபிக்கவில்லை என்பதால், வினோத்குமார் நண்பர்கள் 3 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் முதல் எதிரியான உயிரிழந்த கனகராஜின் சகோதரர் வினோத்குமார் மீதான திட்டமிட்டு கொலை செய்தது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைவது, தகாத வார்த்தைகளால் பேசுவது, எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், வினோத்குமாருக்கு மரண தண்டணை விதிக்கும் அளவிற்கு குற்றம் செய்துள்ளார் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த வழக்கிற்கான தண்டனை இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில்,
இன்று மாலை நீதிபதி இவ்வழக்கிற்கானதண்டனையை உறுதி செய்துள்ளார். அதன்படி இந்த வழக்கை அரிதான வழக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற நீதிபதி குற்றவாளிக்கு மரணத்தண்டனை கூறி தீர்ப்பளித்தார்.