"1000 ரூபாய் வாங்குனீங்களே ஒழுங்கா சோறு போட்டீங்களா?" - கோவை உணவு திருவிழாவில் தள்ளு முள்ளு..!
செய்தியாளர்: பிரவீண்
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் நேற்றும் இன்றும் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன.
அதுமட்டுமின்றி பல்வேறு உணவு நிறுவனங்கள் அவர்களது தயாரிப்பு பொருட்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இதற்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பெறமுடியும். முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருகை புரிந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு முறையாக ஏற்பாடு செய்யவில்லை, உணவுகள் கொடுப்பதில் தகராறு, தள்ளு முள்ளு போன்ற சிக்கல்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். உணவுக்கு வரிசையில் நிற்கும் போது கேட்கும் உணவை கொடுக்க மறுப்பதாக வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.