கோவையில் கார் வெடி விபத்து தொடர்பாக கோவை மாநகர தனிப்படை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், என்ஐஏ டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவை வந்து விசாரித்து வருவதால், அவர்கள் கோவை கார் வெடி விபத்து வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவையில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற கார் வெடி விபத்தில் ஜமீசா முபின் உடல் கருகி பலியானார். இதனை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதை அடுத்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஒன்பது தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே விசாரணையின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு கோவை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ச்சியாக காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை கார் வெடித்தது தொடர்பான விவரங்களை சேகரிக்க துவங்கியுள்ளனர். தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கார் வெடித்தது தொடர்பான விவரங்கள் மற்றும் நடத்திவரும் புலன் விசாரணை குறித்து கேட்டு அறிந்துள்ளனர்.
மேலும் கோவையில் கார் வெடி விபத்து தொடர்பான வழக்கு தற்போது வரை தமிழக காவல்துறையே விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,
கைது நடவடிக்கைகள் ஆய்வு மற்றும் புலன் விசாரணை என அனைத்தும் கோவை மாநகர காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து கோவை வந்துள்ள நிலையில் வெடி விபத்து குறித்த பொதுவான தகவல்களை சேகரித்துவரும் நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும், ஆனால் இறந்துபோன முபின், கைதான ஃபெரோஸ், நவாஸ் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் அனுதாவிகளாக இருந்திருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்னும் தேசிய முகமைக்கு மாற்றப்படாத நிலையில், தேசிய முகமை அதிகாரிகள் நள்ளிரவு கோவைக்கு வந்துள்ளதாகவும், வழக்கு அவர்களிடம் ஒப்படைக்க வாய்ப்பிருப்பதாக தற்போதைய விசாரணை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையில் கோவை வின்சென்ட் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக சாலை ஓரம் இருந்த 12 கார் சோதனை செய்யப்பட்டது.
இதில் உரிமை கோரப்படாத 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள கார்களில் உரிமையாளர் எண் இல்லாதது, எப்.சி. செய்யப்படாமல் உள்ளது மற்றும் உரிமை கோரப்படாதது என பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து கோவை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அனைத்து ஜமாத் அமைப்புகள் சார்பில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும், உக்கடம் கரும்புக்கடை, போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை கூடுதலாக்கி வளப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.