கோவை: உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தும் பயன்பாட்டிற்கு வராத கொரோனா சிகிச்சை மையம்
கோவை அரசு கலைக் கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியால் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
கோவையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையையே நாடுகின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமலும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமலும் அவதியுறுகின்றனர்.
இப்பிரச்சனையை போர்கால அடிப்படையில் களையும் பொருட்டு, கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் அமைப்பு சார்பில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால், 3 நாள்களாகியும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்து வரும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அரசு கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை முன்பணமாக பெற்றே சிகிச்சை அளித்து வரும் நிலையில், இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த மையம் பயன்பாட்டுக்கு வராதது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, ஆக்சிஜன் நிரப்பும் பணிகள் நிறைவடையாததால் திறக்கப்படவிலலை என தெரிவித்தனர்.