கோவை | கேரள நகை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை! நடு ரோட்டில் நடந்த பகீர் சம்பவம்!
செய்தியாளர்: பிரவீண்
ஜெய்சன் என்பவர் கேரளாவில் நகைக்கடை வைத்துள்ளார். இவரும், இவரது கடையில் பணியாற்றும் ஊழியர் விஷ்ணு என்பவரும் சென்னை சென்று 1 கிலோ 250 கிராம் தங்கக் கட்டியை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் இன்று காலை கோவை வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோவையில் இருந்து கார் மூலம் பாலக்காடு நோக்கி சென்றுள்ளனர்.
இதையடுத்து க.க.சாவடியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் லாரியை குறுக்கே நிறுத்தி காரை மறித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கார் கண்ணாடியை உடைத்து சிலர் காரில் ஏறி சிறிது தூரம் சென்றுள்ளனர். பின்னர் காரிலிருந்த ஜெய்சன், விஷ்ணு ஆகிய இருவரையும் இறக்கிவிட்டு, தங்கக்கட்டி மற்றும் காருடன் மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர்.