கஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை
தஞ்சையில் கஜா புயல் தாக்குதலில் தனக்கு சொந்தமான தென்னைகள் முழுவதும் சேதமடைந்ததால் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, வாழை, நெல், மற்றும் கரும்பு பயிர்கள் கஜா புயலில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மனம் வெதும்பி தஞ்சையில் ஏற்கெனவே மூன்று விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
கடந்த 2 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் சோழகிரிப்பட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே முக்கரை கிராமத்தில் தென்னை விவசாயி பாண்டி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கஜா புயலில் தென்னை மரங்கள் முழுவதும் சேதமடைந்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.