தாண்டவம் ஆடிய ‘கஜா’ - தனித் தீவாகவே மாறிய வேதாரண்யம்
நேற்றிரவு முழுவதும் கோரத் தாண்டவமாடிய ‘கஜா’ புயலில் அதிகம் பாதிப்புக்கு ஆளானது வேதாரண்யம். இந்தப் புயலின் தாக்கத்தால், வேதாரண்யம் தனித் தீவாகவே மாறியுள்ளது.
பெயருக்கு ஏற்றாற் போலவே யானை பலத்துடன் நாகை, தஞ்சை, திருவாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது கஜா புயல். குடிநீர், மின்சாரம், சாலை வசதிகளை உடனடியாகச் செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘கஜா’ புயலின் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னமாகி கிடக்கிறது வேதாரண்யம். காணும் இடமெல்லாம் மரக்கிளைகள், மின் கம்பங்களும் சாய்ந்துகிடக்கின்றன. ‘கஜா’ புயலால் சுமார் 10 ஆயிரம் மின்கம்பங்களும், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்திருக்கின்றன. வேதாரண்யத்தில் வேரோடு தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. கடுமையான புயலால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ‘கஜா’ புயலின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்திருக்கின்றன. மேலும் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காணவில்லை என்றும் மீனவர்கள் கூறுகின்றனர்.
கோடியக்கரை வனவிலங்கு சரணலாயத்தில் தப்பிய மான்கள், காற்று, மழையில் சிக்கி கடற்கரை ஓரத்தில் இறந்து கிடக்கின்றன. மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால், வேதாரண்யம் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்விநியோகப் பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட முடங்கிக் கிடந்த போக்குவரத்து 8 மணி நேரத்துக்குப் பிறகு சீர்செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும், வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயலால் உருக்குலைந்திருக்கும் வேதாரண்யத்தில், குடிநீர், மின்சாரம், சாலை வசதிகளை உடனடியாகச் செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.