``நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்”- தோழர் நல்லக்கண்ணுவிற்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

``நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்”- தோழர் நல்லக்கண்ணுவிற்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
``நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்”- தோழர் நல்லக்கண்ணுவிற்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

“பாசிச ஆட்சிக்கு எதிராக நாம் எடுத்து வரும் முயற்ச்சிக்கும் தோழர் நல்லகண்ணு உறுதுணையாக இருக்கிறார்” எனக்கூறி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு இன்று 98 ஆவது பிறந்த நாள். அதை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரை நேரில் வாழ்த்தினார். அவரோடு அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோரும் இருந்தனர். தொடர்ந்து மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்த முதலமைச்சர், அவரை வாழ்த்தி மேடையில் பேசினார். தமிழக அரசின் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தோழர் நல்லக்கண்ணுவுக்கு தகை சால் தமிழர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதல்வர் பேசுகையில், “இவர்களுக்கு வழங்கியதால் தான் விருதுக்கே பெருமை. அப்படிப்பட்டவரை நானும் வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளேன். கொள்கைக்கு இலக்கணம், இலட்சியத்திற்கு இலக்கணம். பாசிச ஆட்சிக்கு எதிராக நாம் எடுத்து வரும் முயற்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்” என பேசினார்.

மேலும் தனது சமூகவலைதள பக்கங்களில் முதல்வர் “ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்; 'தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று தெரிவித்திருக்கிறார்.

தோழர் நல்லகண்ணுவை பற்றி நாம் கட்டாயம் அறியவேண்டிய சில தகவல்கள்:

இவர் 1925 ஆம் ஆண்டு இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிக் காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் இளம் வயதிலேயே சேர்ந்த தோழர் நல்லக்கண்ணு, இந்திய விடுதலை போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1943 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து ஆர்.நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணுவாக மாறினார். அன்று தொடங்கிய ஒடுக்கப்பட்ட, ஏழை, தொழிலாளர், உழைக்கும் வர்க்க, விளிம்பு நிலை மக்களுக்கான நல்லக்கண்ணுவின் போராட்டம் அவரது 98 வயதிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு நல்லக்கண்ணுவுக்கு அளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com