சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
5 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் கூடியநிலையில், செய்தி, விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிகை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.
இந்தநிலையில், இன்று மாநில சுயயாட்சி குறித்த முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் , “ ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கொண்ட நாடாகத்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழங்கி வருகிறது. ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார்.
இந்த குழுவின் இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கருணாநிதி நிறைவேற்றினார். மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. மாநில அரசின் அடிப்படை உரிமைகளுக்காக மத்திய அரசிடம் போராட வேண்டிய நிலை உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தால்தான் மாநிலங்கள் வளர்ச்சி பெறும்.
மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். மருத்துவம், சட்டம், நிதி துறைகளை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி. நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. நீட் தேர்வால் பல மாணவர்களின் விலை மதிப்பில்லா உயிர்கலை இழந்து நாம் தவித்துக்கொண்டிருக்கிறோம். நீட் தேர்வின் மூலம், பொதுக்கல்வி முறையை சிதைக்கப்பார்க்கிறார்கள்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்
மாநில பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றியதால் மும்மொழிக்கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுகு கொண்டு வரும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை மட்டுமே முக்கியமாக கருதுகிறது திமுக அரசு. மாநில பட்டியலில் உள்ளவற்றை மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு செய்கிறது. மாநில நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படும்போது அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கான உரிமையை ஆளுநர் விவகாரத்தில் பெற்றுத் தந்துள்ளோம்.
ஜிஎஸ்டியால் வருவாய் இழப்பு
தமிழ்நாடு செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 29 காசுகள் மட்டுமே மத்திய அரசு திருப்பித்தருகிறது. ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு. மத்திய மாநில அரசு இடையேயான உறவை மேம்படுத்த ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சூரியன் ஜோசப் தலைமையில் குழு. குழுவில் உறுப்பினர்களாக மு. நாகநாதன், அசோக் வரதன், ஷெட்டி இடம்பெறுவர். ஜனவரி மாத இறுதிக்குள் இந்தக் குழு வரைவு அறிக்கையை மாநில அரவுக்கு வழங்கும். இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இந்த குழுவுக்கு 2 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது. “ என்று தெரிவித்தார்.
கூடுதலாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக உறுதி செய்த நிலையில், மாநில சுயாட்சி குறித்து முக ஸ்டாலின் பேச தொடங்கியபோதே , வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து பாஜகவினரும் வெளிநடப்பு செய்தனர்.