செய்தியாளர் - ராஜ்குமார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை இன்று ஆய்வு செய்தார். அந்த வகையில், 8 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 3 கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சென்னை துவக்கப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அப்போது “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வாய்ப்பு இருக்கிறதா?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால் அந்தக் கோரிக்கை இன்னும் பழுக்கவில்லை” என பதில் அளித்தார்.
அதேபோல், “பருவமழை நேரத்தில் மழைப்பொழிவு எந்த அளவு இருந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு மட்டுமே தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் கூறுகின்றனர்” என்றார்.