பெரியாரை அவமதிப்பவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின் கீழ் சிவசக்தி காலணியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ. 53.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், “என்னுடைய எண்ணத்திலும், உள்ளத்திலும் சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. அந்த அடிப்படையில்தான் பல பணிகளை செய்யப்பட்டு வருகிறோம்.
குறிப்பாக, வடசென்னைக்கு சட்டமன்றத்தில் ஏற்கேனவே ரூ 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டத்துக்காக ஒதுக்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன். ஆனால், ரூ 1000 கோடியை தாண்டி பல்வேறு துறைகளுடைய ஒத்துழைப்போடு கிட்டத்தட்ட 6,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. மொத்த பணிகளை பொறுத்தவரைக்கும் 252 பணிகள், அதில் 30 பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன.
166 பணிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. விரைவில் இந்த பணிகள் முடிவடைய இருக்கிறது. வடசென்னையை பொறுத்தவரைக்கும் இது ஒரு வளர்ந்த சென்னையாக நிச்சயமாக இந்த ஓராண்டு காலத்திற்குள் உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏனெனில், பெரியார்தான் எங்களின் தலைவர், தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர்தான்.. ஆகவே, பெரியார்மீது விமர்சனம் செய்பவர்களை பெரிதுபடுத்தவும் இல்லை, பொருட்படுத்தவும் தேவையில்லை” என்றார்.