வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை நடந்தது என்ன? பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்த பதில்! முழு விவரம்

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்கவும், அனைத்து தரப்பு மக்களிடம் அமைதியை நிலைநாட்டவும் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்சட்டப்பேரவை

சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன?” என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மருத்துவ சிகிச்சையில் உட்படுத்தப்பட்ட போது மாசடைந்த குடிநீரை பருகியதால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது.

MK Stalin
MK StalinTwitter

இதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற வருவாய்த் துறையினர், அங்குள்ள மேல்நிலைத் தொட்டியில் ஆய்வு செய்தபோது மனிதக் கழிவு கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தொட்டி மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 25ம் தேதி வெள்ளலூர் காவல் நிலையத்தில் கனகராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அங்கு சேகரிக்கப்பட்ட தடயவியல் விவரங்கள் நீதிமன்ற உத்தரவின்படி சென்னைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம், அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட மறுக்கப்படுவதாக கூறினார்கள்.

MK stalin
MK stalinPT

ஒரு குறிப்பிட்ட தேநீர் கடையில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். இது தொடர்பாக புகார் பெறபட்டு அப்பகுதி மக்கள் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். இரட்டைக் குவளை விவகாரத்தில் தேநீர் கடைக்காரர் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூக்கையா கைது செய்யப்பட்டார்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினர் சுழற்சி முறையில் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. அமைதிப் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் ஜனவரி 14ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

mk stalin
mk stalinTwitter

தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு இரண்டு மாதத்தில் அறிக்கை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அப்பகுதியில் தீண்டாமையை ஒழிக்கவும், அனைத்து தரப்பு மக்களிடம் அமைதியை நிலைநாட்டவும் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com