வண்ணமீன்கள் உற்பத்தியாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்
வண்ணமீன்கள் அங்காடிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் வண்ணமீன்கள் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது வண்ணமீன்களை ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி, வண்ணமீன்கள் உணவு உற்பத்திக்கான மையத்தை தொடங்கி பயிற்சி தர நடவடிக்கை, மின்சாரத்திற்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என வாக்குறுதி அளித்தார். தவிர, வருங்காலத்தில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் சாத்தியக்கூறுகள் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.