mkstalin
mkstalinpt web

“தமிழ்நாட்டில் நாக்கில் தேன் தடவுவது; டெல்லியில் நஞ்சைப் பரப்புவது” - அமித்ஷாவிற்கு முதல்வர் கண்டனம்

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஆகஸ்ட் 4) அலுவலக மொழிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் 38வது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தி எந்த பிராந்திய மொழிகளுடனும் போட்டியிடவில்லை என கூறிய அவர் அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார். மேலும் எதிர்ப்பின்றீ அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ அறிக்கைகள் மூலமாகவோ இருக்கக்கூடாது என்றும் அது நல்லிணக்கம், உத்வேகம் போன்றவற்றின் மூலம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ட்விட்டரில் தெரிவித்ததாவது, “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com