ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒப்புதல்... கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் ஒரேநாடு, ஒரேதேர்தல் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறைக்கு ஒவ்வாத, ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த நடவடிக்கை, குரலை அழித்து, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு எதிராக இந்தியா வெகுண்டெழ வேண்டும் என்று அவர் குரல் எழுப்பியுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத்தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.