”அம்மா உணவகம் மூடப்படாது”- முடக்கப்பட்ட திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் பேச்சு

”அம்மா உணவகம் மூடப்படாது”- முடக்கப்பட்ட திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் பேச்சு
”அம்மா உணவகம் மூடப்படாது”- முடக்கப்பட்ட திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் பேச்சு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று உரையாற்டினார். அப்போது அவர் அம்மா உணவகம் மூடப்படாது என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார். 

கொரோனா மிரட்டிக் கொண்டிருப்பதால் 2 நாட்கள் மட்டுமே பேரவை நடைபெறுகிறது என்று கூறி உரையை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நேற்றைய தினம், அம்மா மினி கிளினிக் - அம்மா உணவகம் என அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இப்படி பட்டியலிட வேண்டுமென்றால், எங்களுக்கும் பட்டியல் நீளவே செய்யும்.

உதாரணமாக திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டப்பேரவை கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? மாபெரும் அண்ணா நூலகத்தை மாற்ற முயன்றது, நூலகத்தை பராமரிக்காமல் விட்டது, அண்ணா நூலகத்தில் கலைஞரின் பெயரை மறைத்தது… இதெல்லாம் செய்தது யார்? கலைஞர் காப்பீடு திட்டத்தில் கலைஞர் பெயரை மாற்றியது யார்? செம்மொழி பூங்காவில் கலைஞர் பெயரை மறைத்தது யார்? கடற்கரை பூங்காவில் கலைஞர் பெயரை எடுத்தது யார்? ராணி மேரி கல்லூரியில் கலைஞர் அரங்கத்தின் பெயரை நீக்கியது யார்? கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காக, பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரத்தை சீர்குலைத்தது யார்? உழவர் சந்தைகளை மூடியது யார்? தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனத்தை முடக்கியது யார்? ‘நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம்’ ஆகிய திட்டங்களை கிடப்பில் போட்டது யார்? சமச்சீர் பாடப்புத்தகத்தில் கலைஞர் தொடர்பானவற்றை நீக்கியது யார்? இப்படி வரிசையாக எங்களாலும் பட்டியலிட முடியும்.

ஆனால் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள் என்பதற்காக நாங்களும் அப்படி செய்வோம் என்று சொல்ல மாட்டோம். அப்படி உங்களைப் போல முந்தைய ஆட்சியின் திட்டங்களை முடக்கும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. ஒருபோதும் ஏற்படவும் ஏற்படாது. அதனால்தான் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் ஜெ.ஜெயலலிதா இசை மற்று கவின் கலை பல்கலைக்கழகம் ஆகியவை பெயர் மாற்றம் ஏதுமின்றி இருக்கிறது. உயர்க்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை இருக்கிறது. அவரது நினைவகம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அரசே கவனித்துக்கொள்ளவும் செய்கிறது.

அம்மா மினி கிளினிக்கை பொறுத்தவரை, அப்படி ஒரு க்ளினிக் நடைமுறையிலேயே இல்லை. பல குளறுபடிகள் அதில் உள்ளது. உண்மை நிலை அப்படியிருக்க, இல்லாத ஒரு கிளினிக்கை எப்படி அரசு மூடியது என சொல்கின்றீர்கள்? அம்மா உணவகத்தை பொறுத்தவரை, அது இப்போதுவரை மூடப்படவில்லை; இனியும் மூடப்படாது. எந்த ஒரு அம்மா உணவகமும் மூடப்படாது. இதை எதிர்க்கட்சி தலைவருக்கு உறுதியாக நானே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நேற்றைய தினம் அவை முன்னவர் ஆதங்கத்தில் தான் ‘கலைஞர் பெயரில் வந்த எத்தனையோ திட்டங்கள் மூடப்பட்டது. ஒரு உணவகத்தை மூடினால் என்ன’ என்று கேட்டார். மற்றபடி அதில் உள்நோக்கமும் இல்லை” என்றார்.

தொடர்ந்து முதல்வர் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் வழிமுறைகள், உட்கட்டமைப்புகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும்; ஃபாக்ஸான் தொழிற்சாலை தொடர்பான போராட்டங்கள் எழுந்ததை தொடர்ந்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. அவற்றுடன் இந்த ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த விடுதி அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com