இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா.. சட்டசபையிலேயே அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்த் திரையுலகில் பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசைஞானி இளையராஜா. அவருடைய இசையை உலகம் முழுவதும் பல ரசிகர்கள் கேட்டு வியக்கின்றனர்; ரசிக்கின்றனர்; கொண்டாடுகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இசையைத் தாண்டி உலக அரங்கில் பல்வேறு இசை முயற்சிகளையும் சாதனைகளையும் தொடர்ச்சியாக இளையராஜா செய்து வருகிறார். அதில் மிக முக்கியமான சாதனையாக, சமீபத்தில் இங்கிலாந்தில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றியிருந்தார். இதன்மூலம் ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்தியாவில் இருந்து சிம்பொனியை எழுதி, சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2ஆம் தேதி நடத்தப்படும் என்று சட்டசபையிலேயே தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். லண்டன் சென்று திரும்பியதும் முதல்வர் இளையராஜாவை சந்தித்திருந்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்தான், இன்று சட்டமன்றத்தில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் எனக் கூறை அதற்கான தேதியையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1976ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவுக்கு அறிமுகமானஇசைஞானி இளையராஜா ஜூன் 3ஆம் தேதி பிறந்தவர். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளும் இதே தேதி என்பதால், அவருக்காக தன்னுடைய பிறந்த நாளை இளையராஜா ஜூன் 2ஆம் தேதி என மாற்றிக் கொண்டார். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.