வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் வழங்கிய அண்ணா பதக்கங்கள்

வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் வழங்கிய அண்ணா பதக்கங்கள்
வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் வழங்கிய அண்ணா பதக்கங்கள்

70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கினார். சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவரின் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை தனி ஆளாக விரட்டிப்பிடித்தவர் சூர்யகுமார். 

தன்னைப் பற்றி கவலைப்படாமல் குரங்கணி தீ விபத்தில் சிக்கிய 8 பேரின் உயிரைக் காப்பாற்றியவர் தேனி மாவட்டம் முந்தலைச் சேர்ந்த ரஞ்சித்குமார். தன் உயிரைப் பணயம் வைத்து ஏரியில் தத்தளித்த 6 பேரின் உயிரை காப்பாற்றியவர் தஞ்சாவூர் மாவட்டம் மேலையூரைச் சேர்ந்த ஸ்ரீதர். இவர்கள் 3 பேருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் தங்க பதக்கத்தை முதலமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.எஸ்.பி. வேதரத்தினம், ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் பிரகாஷ், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருக்குமார், சேந்தமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக்காவலர் கோபி ஆகியோருக்கு சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் பதக்கம் வழங்கப்பட்டது. 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கம் ஆகியவற்றை சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com