நதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்
தமிழக- கேரள நதிநீர் பிரச்னைகள் குறித்து கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா செல்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று திருவனந்தபுரம் செல்ல உள்ளார். அவருடன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தலைமைச்செயலாளர் உள்பட துறை அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பங்கீட்டு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உள்ளனர்.
பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்புத் திட்டம் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பின்பு இன்று இரவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்,