விவசாயிகளுக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
மேலூர் 4 வழிசாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், வைகை அணையிலிருந்து தண்ணீர்
திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், மேலூர் மற்றும்
திருமங்கலம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் போதிய மழை பெய்யாத
காரணத்தினாலும், நிலத்தடி நீர் வறண்டு காணப்படுவதால் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு போதிய குடிநீரின்றி
சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய வைகை அணையிலிருந்து
தண்ணீர் திறந்துவிட கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வைகை
அணையிலிருந்து கூடுதலாக 900 கன அடி தண்ணீரினை சிறப்பு நிகழ்வாக 21.11.2017 முதல் 27.11.2017 வரை ஏழு
நாட்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய்
வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைப்படி நாளை தண்ணீர் திறக்கவுள்ளதால், மேலூரில் போராடிய விவசாயிகள், தங்கள்
போராட்டத்தை கைவிட்டனர்.