“ஜோலிய முடிச்சு விடு என்றால் என்ன அர்த்தம் ?” - நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், நெல்லை கண்ணன் என்ன தவறு செய்தார்? அவர் ஏன் கைது செய்யப்பட்டார் ? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேச கூடாது என்றும், ஜோலிய முடிச்சு விடு என்றால் என்ன அர்த்தம் ? என்றும் பதில் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், நெல்லைக் கண்ணன் மீது சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், பிரதமர், உள்துறை அமைச்சரை அப்படி பேசலாமா ? எனவும் கேட்டார். மேலும், “நெல்லை கண்ணன் கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. எந்த தலைவரையும் அப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தில் நெல்லை கண்ணன் பேசியிருந்தார். அந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.