ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - முதல்வர் பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர்
ஆர்.எஸ்.பாரதியின் கைதுக்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பழிவாங்கல் நடவடிக்கை என திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததாலேயே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.அரசியல் ஆதாயத்திற்காக அரசின் மீது ஸ்டாலின் புகார் கூறுவது கண்டிக்கத்தக்கது.ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ்.பாரதி பத்திரிகை விளம்பரத்துக்காக புகார்களை கொடுக்கிறார். அரசின் இ-டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறுவது பொய்'' எனத் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.