‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே மணப்பாக்கத்தில் நடைபெற்ற தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அடுத்தாண்டு தொடக்கத்தில் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மேலும் பெருகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் தொழில் நடத்துவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதன் மூலம், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் தெரிவித்தார். அரசின் சேவைகள் இணையதளம் வழியாக மக்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும், கிராமங்கள் தோறும் இணையதள சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.