தமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை சிறைகளில் இருக்கும் 16 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை அரசு மீனவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக தலா 26 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அரசு மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்த போதே, அது குறித்து தான் கடிதம் எழுதியதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர் பிரச்னையில் தீர்வு காண மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் இலங்கை அரசு தமிழக மீனவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளார். இலங்கை அரசின் செயல்பாடு தமிழக மீனவர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூத்துக்குடி மீனவர் மீதான வழக்கையும், அபராதத்தையும் திரும்பப் பெற மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இலங்கை சிறைகளில் உள்ள 16 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

