ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி
Published on

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், அமைச்சர்‌கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறும்போது, ‘’இந்த வருடம் மழை குறைவாக பெய்ததால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளுமே வறண்ட நிலையில் இருக்கிறது. இதே காலகட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 3 டிம்சி தண்ணீர் இருந்தது. இந்த வருடம் வறண்டு விட்டது. இருந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தேவையான குடிநீரை, அரசு வழங்கி வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம்.  எங்கெல்லாம் குடிநீர் பிரச்னை இருக்கிறதோ, அங்கெல்லாம் குடிநீரை சரியாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது. 

தேர்தலுக்கு முன்பாகவே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க எனது தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அந்த அலோசனை படி செயல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் குடிநீரை வழங்கி வருகிறார்கள். தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கேரள அரசு, ஒரே ஒரு நாள் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக சொல்லியிருக்கிறது. அது போதாது. தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முடியுமா என்று கேட்டு கடிதம் எழுத உள்ளோம். தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் அமைச்சர்களும் அதிகமாக தண்ணீரை பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். என் வீட்டில் கடந்த 2 மாதமாக நான் மட்டுமே இருக்கிறேன். பார்வையாளர்கள் வருகிறார்கள். இவர்களுக்கு என்ன தண்ணீர் ஆகிவிட போகிறது. 2 லாரி தண்ணீரை நான் எப்படி காலி செய்வேன்? எனக்கு ஏன் அவ்வளவு தண்ணீர்?

அபார்ட்மெண்ட்களுக்கு அதிகமாக தண்ணீர் தரப்படுவதில்லை என்று கேட்கிறார்கள். ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு 10 லாரி தண்ணீர் கேட்டால் எப்படி கொடுக்க முடியும்? மற்றவர்களுக்கு வேண்டாமா? அதைக் கருத்தில் கொண்டே குறைவாகக் கொடுக்கப்படுகிறது.  இந்த வருடம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் 2 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் தண்ணீர் பிரச்னைக்கு காரணம். தண்ணீர் பிரச்னையில் திமுக மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என்றார். 

பேட்டியின் போது அமைச்சர் வேலுமணியும் உடனிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com