‘கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது’ - முதலமைச்சர் பழனிசாமி
‘கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது’ என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8718 ஆக அதிகரித்துள்ளது. 61 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும்
தமிழகத்தில் இதுவரை 2,134 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 4,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்.
கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு உள்ளது. கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.