தண்ணீர் பிரச்னை - ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
நீர் மேலாண்மை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், தண்ணீர்ப் பிரச்னை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால்,பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டதால், விவசாய கிணறுகள் மற்றும் கல்குவாரி நீர் மூலம் தண்ணீர் கொண்டுச்செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன.மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு விரிவான நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் கூறினார். மேலும் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனையில் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன், பொதுபணித்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.