
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை அடுத்து தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை அடுத்து தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள அவர், ''அயோத்தி தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதி பூங்காவாக திகழச் செய்யுங்கள். உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதிக்க வேண்டும். நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் இருக்க அனைத்துக் கட்சி தலைவர்களும், அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழையுங்கள்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.