’இரண்டாந்தரக் குடிமக்களா தமிழர்கள்? ’ - மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்மீது உண்மையான அன்பு வைத்திருந்தால், இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துக என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“ நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழ் மீது மிகுந்த அன்பு இருக்கிறது என்று பாஜகவினர் கூறுகிறார்கள். இது உண்மை என்றால், அது ஏன் ஒருபோதும் செயல்பாட்டில் பிரதிபலிக்கவில்லை?
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவுவதற்கு பதிலாக, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து இந்தியை நீக்கவும். வெற்றுப்பாராட்டிற்கு பதிலாக தமிழை இந்திக்கு இணையான அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றி, இறந்துபோன மொழியான சமஸ்கிருதத்தை விட அதிக நிதியை ஒதுக்கவும்.
திருவள்ளுவரை காவிமயமாக்கும் முயற்சிகளை நிறுத்தி, எக்காலத்திற்கும் அழியாத திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கவும். இதற்கு மாறாக மத்திய பட்ஜெட்டின்போது திருக்குறளை மேற்கொள் காட்டுவது ஏற்புடையது அல்ல. சிறப்பு திட்டங்களை அறிவித்து, பேரிடர் நிவாரண நிதி, தமிழ்நாட்டிற்கான புதிய ரயில்வே திட்டங்களை உறுதி செய்திடுக.
தமிழ்நாட்டில் ‘ இந்தி பக்வாதாஸ்’ என்ற முட்டாள் தனத்திற்காக வரி செலுத்துவோரின் பணத்தை வீணாக்குவதை நிறுத்துங்கள். அந்த்யோதா, தேஜஸ் மற்றும் வந்தே பாரத் போன்ற சமஸ்கிருந்தப் பெயர்களை தமிழ்நாட்டின் ரயில்களில் திணிக்கும் அபத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள். அதற்கு மாறாக, செம்மொழி, முத்துநகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் எக்ஸ்பிரஸ் என்று தமிழ் மொழியில் பெயர் வைக்கும் நடைமுறைக்கு திரும்புங்கள்.
தமிழ்மீது இருக்கும் அன்பு அதை நிரூபிப்பதில் இருக்கிறதே தவிர, ஏமாற்றுவதன் மூலம் இல்லை.’ என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மொழிச் சமத்துவமே தி.மு.க.வின் இலட்சியம்! , இரண்டாந்தரக்குடிமக்களா தமிழர்கள்? ‘ என்ற தலைப்பில் இரண்டு பக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.