சென்னையில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அங்கு முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பள்ளியின் அருகே உள்ள பாரதி மகளிர் கல்லூரி மைதானத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகளுடன் அம்மையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 8 மருத்துவர்களும், 14 செவிலியர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.