தத்ரூபமாக உருவாகும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவச்சிலை; நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

தத்ரூபமாக உருவாகும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவச்சிலை; நேரில் ஆய்வு செய்த முதல்வர்!
தத்ரூபமாக உருவாகும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவச்சிலை; நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான அன்பழகனுக்கான சிலை தயாரிப்பு பணிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகனின் இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவை. நூற்றாண்டு விழாவாகத் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவர் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நினைவு கூறும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையின் தலைமையகமான டிபிஐ வளாகத்திற்குப் பேராசிரியர் அன்பழகன் வளாகம் எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவு அமைக்கப்பட்டது. அதை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்குச் சிலை நிறுவப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின் முழு உருவச் சிலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் அமைந்துள்ள சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்தில் தயாராகி வருகிறது. 8.5 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை தயாரிக்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாகக் களிமண் மாதிரி சிலை தற்போது வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிற்பி தீனதயாளன், சிற்பி கார்த்திகேயன் குழுவினர் இந்த சிலையினை வடிவமைத்துள்ளனர்.

இந்த மாதிரி சிலையைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளைச் சிற்பிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். மேலும் சிலை தயாரிப்பு பணிகளுக்குத் தேவைப்படும் காலம் குறித்தும் முதலமைச்சர் சிற்பிகளுக்கு ஆலோசித்து வழங்கினார்.

மற்றொருபக்கம், தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் பெரியாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சருடன் இணைந்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு , திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி .ஆர். பாலு ஆகியோர் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் திமுக இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

-ஷர்நிதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com